வேலூர: வேலூர் நேதாஜி காய்கனி மார்க்கெட்டுக்கு பண்ருட்டி மற்றும் வடலூர் பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் வரத்து உள்ளது. பலாப்பழ சீசனான ஏப்ரல் தொடங்கி ஜூன், ஜூலை வரையுள்ள காலக்கட்டத்தில் சாதாரணமாக 5 லோடுகள் வரை தினமும் பலாப்பழ வரத்து இருக்கும். அதன்படி வேலூர் காய்கனி மார்க்கெட்டுக்கு சீசன் தொடக்கமான தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் இருந்து பலாப்பழங்கள் வரத்து தொடங்கியுள்ளது. நேதாஜி மார்க்கெட்டில் விற்பனைக்காக வந்துள்ள பலாப்பழங்கள் 5 முதல் 15 கிலோ எடை வரை உள்ளது.
இதில் எடைக்கேற்ப முழு பழம் ரூ200 முதல் ரூ1,000 வரை விற்பனையாகிறது என்று பலாப்பழ வியாபாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பலாப்பழ வியாபாரிகள் கூறும்போது, ‘இப்போதுதான் பலாப்பழம் வர ஆரம்பித்துள்ளது. வேலூரை பொறுத்தவரை பலாப்பழம் பெரும்பாலும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்துதான் வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பலாப்பழ வரத்து அதிகரிக்கும். வரத்து அதிகரிக்கும் நிலையில் அதன் விலையும் குறைய தொடங்கும்’ என்றார்.
