×

வேறு திருமணம் செய்ய இருந்த நிலையில் ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக காதலி புகார் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் அனுப்பி விட்டு போரூர் ஏரியில் குதித்த வாலிபர்: தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள்

பூந்தமல்லி: வேறு திருமணம் செய்ய இருந்த நிலையில் ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக காதலி கொடுத்த புகாரால் மனஉளைச்சலுக்கு ஆளான வாலிபர், நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் அனுப்பி விட்டு போரூர் ஏரியில் குதித்துள்ளார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண், தனது வழக்கறிஞருடன், சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘நான் 10ம் வகுப்பு படிக்கும் போது வடபழனியை சேர்ந்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக கூறினார். பள்ளியில் படிக்கும் போதே காதலிக்க தொடங்கிவிட்டோம்.

கல்லூரியில் படிப்பிலும் தொடர்ந்தது. என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்டார். எனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு வாங்கினார். இப்படியாக என்னிடம் ரூ.68 லட்சம் பெற்று கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். விசாரித்த போது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் கிடைத்தது. எனவே என்னை காதலித்து தவறாக நடந்து கொண்டுவிட்டு, ரூ.68 லட்சம் ஏமாற்றிய காதலன் நிஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதனிடையே கடந்த 3ம் தேதி, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது காதலி புகார் அளித்தார். இதையடுத்து நிஷாந்த்தின் திருமணத்தை தடுத்து நிறுத்தி போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த நிஷாந்த், நேற்றிரவு தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்.ல் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தான் போரூர் ஏரியில் குதிக்க போகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை போரூர் மேம்பாலத்தின் மேல் ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஏரிக்குள் குதித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து விருகம்பாக்கம் தீயணைப்பு படையினர் மற்றும் போரூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏரியில் குதித்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில், போரூர் ஏரியில் குதித்த நபர், போலீசாரால் தேடப்பட்டு வரும் நிஷாந்த் என தெரியவந்தது. தொடர்ந்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Borur Lake , A teenager jumped into Borur lake after sending a WhatsApp message to his friends complaining that his girlfriend had cheated him of Rs.
× RELATED போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு