×

சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் கணக்கெடுப்பு; 40 வகையான நிலவாழ் பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: வனத்துறையினர் தகவல்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவைகளும் வசிக்கின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்களில் கடந்த ஜனவரி 29ம் தேதி நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.   

இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலத்தில் வாழும் தரைவாழ்  பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 10 வனச்சரகங்களிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிநவீன தொலைநோக்கி கருவிகள் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில், பெண்வயிற்று கச்சான், கரும்பருந்து, விராலடிப்பான், நத்தைக்குத்தி நாரை, கொம்பன் பருந்து, கிளி வகைகள், குயில் வகைகள்  போன்ற பறவை இனங்களை நேரில் பார்த்து கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

தாளவாடி வனப்பகுதியில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மலபார் கிளி,  மஞ்சள் பிடரி சின்ன மரங்கொத்தி, சின்ன மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், பட்பாணிக் குருவி, பொறிமார்பு சிலம்பன், துடுப்புவால் கரிச்சான் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் நேரில் பார்த்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 40  வகையான பறவை இனங்களை நேரில் பார்த்து கணக்கெடுப்பு பணி மேற்கொண்டுள்ளதாகவும், கணக்கெடுப்பு விபரங்களை  உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கணக்கெடுப்பு பணியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வன உயிரின ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Survey in Satti Tiger Reserve Forest; 40 Land Bird Species Discovered: Forest Department Information
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு