மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உ.பி வாரியர்ஸ் அணி வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் போட்டியில் கேப்டன் பெத் மூனி காயமடைந்ததால் குஜராத் அணியை சினே ராணா வழிநடத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். உ.பி வாரியர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா, எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த உ.பி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, கிரண் நவ்கிரே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். குஜராத் அணி பக்கமே ஆட்டம் சாதகமாக இருந்த நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரேஸ் ஹாரிஸ் 26 பந்துகளில் 59 ரன்களை விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க இலக்கை எட்டிய உ.பி வாரியர்ஸ் அணி தமது வெற்றி கணக்கை தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த குஜராத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
