×

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் விரைவில் பயன்பாட்டிற்கு வருமா?: பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: புதுவையில் அண்ணா விளையாட்டு அரங்க பணிகள் மந்தமாக நடைபெறும் நிலையில் வரும் கல்வியாண்டிலாவது அவை பயன்பாட்டிற்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் அதிகளவில் உள்ளன. இங்கு பெரும்பாலானவற்றில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா திடலை அதை சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த திடலானது தனியார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டங்கள் பொருட்காட்சிகள் நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டு திடலை சுற்றி குபேர் பஜாரும் இயங்கின.

இதனிடையே நகர பகுதியை அழகுபடுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடலை சிறு விளையாட்டு அரங்கமாக மேம்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான திட்ட வரையறை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.12.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. கடந்த 2021 ஜனவரியில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 14,495 சதுர மீட்டர் பரப்பில் பல்வேறு அம்சங்களுடன் புதிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான வரைபடம் தயாரானது.

இந்த விளையாட்டு மைதானத்தில் வாகன நிறுத்துமிடம், வணிக கடைகள், கழிப்பிட வசதிகள், தங்குமிடம், பார்வையாளர் மாடம், அலுவலகம், சேமிப்பு கூடம் உள்ளிட்டவற்றுடன் மாணவர்களுக்கு 200மீ ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ் மைதானம், கைப்பந்து மைதானம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இயற்கை அழகுடன் கூடிய புல்வெளி மரங்கள், திறந்தவெளி இருக்கைகள், தகவல் பலகை, உயர்கோபுர மின் விளக்குகளும் அமைய உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு தொடங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் விளையாட்டு அரங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை.

மந்தமாக நகரும் கட்டுமானப் பணிகளால் மேலும் சில மாதங்கள் தாமதம் ஆகும் நிலை உள்ளது. நகரின் மைய பகுதியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பல்வேறு கேள்விகளை அரசுக்கு எழுப்புகின்றனர். எனவே புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே அண்ணா விளையாட்டு திடலை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Anna sports stadium ,Puducherry city , Will the Anna sports stadium located in the heart of Puducherry city soon come into use?: Expectation of school students
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி