மது போதையில் விபரீதம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ கைது

கம்பம் : மது போதையில் மனைவியை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்ஐயை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், கம்பம் நகர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் 2வது மனைவி அமுதாவுடன் கம்பம்மெட்டு காலனி 2வது தெருவில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் அமுதா உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து அமுதாவின் கணவரான எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விஜயகுமார் கூறியதாக போலீசார் கூறுகையில், ‘‘ஜெயக்குமாரின் முதல் மனைவி மற்றும் 2 மகன்கள் உத்தமபாளையத்தில் உள்ளனர். அமுதாவுடன் கடந்த சில ஆண்டுகளாக கம்பம்மெட்டு காலனி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரவு நேரங்களில் ஜெயக்குமார், அமுதா தம்பதி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயக்குமார், அமுதாவை சராமரியாக தாக்கியுள்ளார். இதில், அமுதா உயிரிழந்ததாக கூறப்படுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, அமுதாவின் கணவரான சிறப்பு எஸ்ஐ ஜெயக்குமாரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: