ராயக்கோட்டை : ஆந்திரா, கர்நாடக மாநில வியாபாரிகளுக்கு வழங்க, ராயக்கோட்டை பகுதியில் பூ நாற்று உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள விவசாயிகள், நாற்று பண்ணைக்கு சீரான வெப்ப நிலையை வழங்க எல்இடி பல்புகளை இரவில் ஒளிரச்செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் பசுமை குடில் அமைத்து பூச்செடிகளுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பூ நாற்றுகளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இந்த நிலையில் ராயக்கோட்டை பகுதியில் பூ நாற்று உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நாற்று பண்ணையில் பூ நாற்றுகள் சீராக வளர எல்இடி பல்புகளை எரிய விடுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ராயக்கோட்டை பகுதியில், பூ நாற்றுகள் சீராக வளரவும், பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்கவும், பகல் பொழுதில் நிலவும் தட்பவெப்பத்தை இரவிலும் இருக்கச் செய்ய நாற்று பண்ணையில் எல்இடி பல்புகளை இரவில் எாிய விடுகின்றனர். இதற்காக ஒரு ஏக்கருக்கு சுமார் 500 எல்இடி பல்புகளை எரிய விடுகின்றனர். மாலை 6 மணி முதல், காலை 6 மணி வரை இந்த பல்புகளை எரிய விடும் போது, மின் கட்டணமாக 2 மாதத்திற்கு ₹30 ஆயிரம் வரை கட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு வளர்க்கப்படும் பூ நாற்றுகள், சுமார் ஒன்றரை ஆண்டு வரை பயன்கொடுக்கும். இந்த நாற்றுகளை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு விற்பனை செய்ய, அங்குள்ள வியாபாாிகள் நேரில் ராயக்கோட்டைக்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்,’ என்றனர்.
