முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 1983ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தாய் மண்ணாம் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்தனர். அதன்படி, தஞ்சமடைந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்டங்களில் 106 முகாம்கள் அமைக்கப்பட்டு 19,346 குடும்பங்களைச் சார்ந்த 58,245 பேர் வசித்து வருகின்றனர்.

2021 மே திங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பான, மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் விதமாக முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை, கல்வி உதவித்தொகை, துணிமணி மற்றும் பாத்திரங்கள் வழங்குவதற்கான தொகைகள் பன்மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.2,000 மானியமும், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரம் உயர்வதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுதாய முதலீட்டு நிதி ரூ.75,000ல் இருந்து ரூ.1,25,000 ஆக உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.6 கோடி நிதி அதற்காக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சமூக நலத்திட்டங்களும் முகாம்வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முகாம் வாழ் தமிழர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.176 கோடி செலவில் 3510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதேபோல, அவர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்து கொடுப்பதற்காக ரூ.10 கோடியும், முகாம் பராமரிப்பு செலவுகளுக்கு வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியுரிமை மற்றும் சுய விருப்பத்துடன் தாயகம் திரும்புதல் போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஆலோசைனைக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருவண்ணாமலை, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வின்போது, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* முகாம் வாழ் தமிழர்களுக்கு என்றும் காப்பரணாக இருப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

முகாம் வாழ் தமிழர்களுக்கு என்றும் காப்பரணாக இருப்போம் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: 7 மாவட்டங்களில் உள்ள 9 முகாம்களை சேர்ந்த தலைவர்கள் இன்று (நேற்று) என் இல்லத்துக்கு வந்து, பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்தனர். முகாம் வாழ் தமிழர்களின் நலன் காக்கும் நமது அரசின் திட்டங்களை பாராட்டினர். வாழ்த்துகளை விஞ்சிய மகிழ்ச்சியை அடைந்தேன். அவர்களுக்கு என்றும் காப்பரணாக இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: