×

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பஸ்: ரூ.300 கட்டணத்தில் அனைத்து இடங்களையும் பார்க்கலாம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்  பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் அழகிய கடற்கரைகள், புராதன சிறப்பு வாய்ந்த கோயில்கள், தேவாலயங்கள், தொட்டிப்பாலம், நீர்வீழ்ச்சி, அரண்மனை, நினைவிடங்கள் ஏராளம் உள்ளன. இவற்றுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் அனைத்து சுற்றுலா தலங்களையும் இணைத்து அரசு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் அவ்வாறு இயக்கப்படுவது தொடக்க விழாவோடு நின்றுபோன நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

போதிய அளவு சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களை பயன்படுத்த முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய முயற்சியாக அண்மையில் சிவாலய ஓட்டத்தையொட்டி 12 சிவன் கோயில்களை இணைத்து மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்குவதாக அறிவித்திருந்தது. இதனை போன்று கிறிஸ்தவ தேவாலயங்களை இணைத்தும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில்  பொதுமக்களின் வசதிக்காக  ஆன்மிக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை அணை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களின் வேண்டுகோளின்படி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரில் இருந்தே பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கிளை மேலாளர் (நாகர்கோவில்)- 9487599085, கிளை மேலாளர் (வணிகம்)- 9487599082, கிளை மேலாளர் (கன்னியாகுமரி)- 9487599087 எண்களை அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு பிற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் இந்த பஸ் இயக்கப்படும்.

நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை பயணம் அமையும் வகையில் திட்டமிடலாம். ஆனால் 45 முதல் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக, ஒன்றிரண்டு கிராமத்தை சேர்ந்தவர்களோ இணையும் பட்சத்தில் அரசு பஸ்சை பயன்படுத்திட வாய்ப்பாக அமையும். இது பயண கட்டணம் மட்டும்தான். பிற உணவு உள்ளிட்ட தேவைகளுக்கான வசதிகளை சுற்றுலா பயணிகள் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் மீது மக்களுக்கு ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை போன்று குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டத்திற்கும் இதனை போன்று  சுற்றுலா, ஆன்மிக பயணம் போன்றவற்றுக்கும் அதற்கு உரிய கட்டண விகிதங்களுடன் அரசு பஸ்களை வழங்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது என்றார்.

Tags : Tamil Nadu Government Transport Corporation , Tamil Nadu State Transport Corporation connecting tourist places by government bus: you can see all the places for a fee of Rs.300
× RELATED அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற் பயிற்சி பெற அழைப்பு