- ஏஐடியுசி போக்குவரத்து சங்கம்
- ஊட்டி
- ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மகா சபை
- தின மலர்
*ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் தீர்மானம்
ஊட்டி : போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் என ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஊட்டி மண்டல ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மகா சபை கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. ஊட்டி மண்டல தலைவர் மோகனன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சையது இப்ராஹிம், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஏஐடியுசி., போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொது செயலாளர் ஆறுமுகம், மாநில துணை பொது செயலாளர் முருகராஜ், துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். மலை மாவட்டமான நீலகிரியில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு வழங்குவதை போலவே ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணிமனை தொழிலாளர்களுக்கும் மலைவாழ்படி ரூ.6000 வழங்க வேண்டும். 2003க்கு பின்பு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். மலை வழித்தடத்தில் கிமீ நீட்டித்து வேலைபளுவை கட்டாயமாக திணிப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வுபெற்று ஆண்டு கணக்கில் பணப்பலன்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பல தொழிலாளர்கள் அவற்றை பெறாமலேயே மரணமடைந்து விடுகின்றனர். எனவே ஒய்வுபெறும் நாளிலேயே அனைத்து பண பலன்களைவும் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் வழங்குவது மறுக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே உடனடியாக கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணம் கூட்டுறவு கடன் சங்கம், காப்பீடு உள்ளிட்டவற்றை செலுத்தப்படுவதில்லை. பிடித்தம் செய்யப்படும் பணத்ததை முறையாக செலுத்த வேண்டும். பஸ்களில் போஸ்டிங் போடுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பணிமூப்பில் மூத்த தொழிலாளர்களுக்கு தாங்கள் விரும்பும் வழித்தடத்தில் பணியமர்த்தப்படுவதில்லை.
மாறாக இளையவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். எனவே சீனியாரிட்டி டூட்டி முறையை அமல்படுத்த வேண்டும். மினி பஸ்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுரவ தலைவர் குணசேகரன், துணை பொது செயலாளர்கள் நசீர், தங்கதுரை உட்பட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
The post போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.