×

39ஆண்டுகளுக்கு பிறகு பேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன் : 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர், 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதாவது, 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் அவர் நுழைய உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்தவர். 74 வயதாகிறது. சென்னை மாநில கல்லூரியில் சேர்ந்து பிஏ பொருளாதாரம் பட்டம் பெற்றார்.


அதன் பின்னர் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளராக பதவி வகித்த அவர் 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 2003ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தார். 2வது முறையாக 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். 2004ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூரிலும், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1984ம் ஆண்டு  சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட  ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதற்கு பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வந்தார். இந்நிலையில் அவரது  மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைவின் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அமோக வெற்றியை பெற்றுள்ளார்.



Tags : EVKS ,Amoka , EVKS enters the assembly after 39 years. Elangovan: overwhelming victory by a margin of 66 thousand votes.
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்...