×

ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் வலுவிழந்து காணப்படும் தரைப்பாலம்: வாகன ஓட்டிகள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் வலுவிழந்து காணப்படும் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதியபாலம் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில்  ஆந்திர, தமிழகத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலம்  1954ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ளவர்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

மேலும் ஆந்திர மாநிலமான தடா அருகில், தமிழகத்தின் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளதுபோல், ஆந்திராவில் சிட்டி என்ற தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வேலைக்குச் செல்கின்றனர். மேலும் இந்த சிட்டியில் உள்ள நிறுவனங்களுக்கு கனரக வாகனங்களில் இரும்பு உள்ளிட்ட உதிரி பாகங்களை ஏற்றி செல்கின்றனர். மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிராவல் மற்றும் சவுடுமண் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் உள்ள இந்த தரைப்பாலம் வலுவிழந்து காணப்படுகிறது.

மேலும் 69 வருடங்களுக்கு முன்பு கட்டிய இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதியபாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு - ஆந்திராவை இணைக்கும் இந்த தரைபாலம் கட்டி சுமார் 69 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாலம் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாகதான் ஆந்திர மாநிலத்தில் உள்ள தடா, சூளூர்பேட்டை, நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள். மேலும் கனரக வாகனங்களும், ஆந்திராவில் இருந்து மணல் லாரிகளும் தமிழகத்திற்கு வருகிகின்றன. இந்த பாலம் எப்போது இடிந்துவிழும் என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த பாலத்திற்குப் பதில் புதியபாலம் கட்ட வேண்டும்,’’ என்றனர்.

Tags : Footbridge ,Oothukottai Sathyavedu road , Footbridge on Oothukottai Sathyavedu road is weak: motorists fear
× RELATED கிருதுமால் நதி தரைப்பாலம் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை