×

கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார் டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட்

சென்னை: கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட் ஆய்வு செய்தார். டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் திரு.கிறிஸ்டியன் வின்தால் விண்ட் அவர்கள் தலைமையிலான குழுவினர் கோயம்பேட்டில் உள்ள நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (01.03.2023) பார்வையிட்டனர். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரமான குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீரை சேகரித்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் முறைகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், டென்மார்க் குழுவினர் விவாதித்தனர்.   

சென்னை குடிநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து இக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் வசிக்கும் 85 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், குடிநீர் வழங்கும் நீராதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, வீராணம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளின் கொள்ளளவு, விநியோகிக்கப்படும் பகுதிகள் போன்ற விவரங்களும் அளிக்கப்பட்டது. மேலும், நெம்மேலி (110 எம்.எல்.டி) மற்றும் மீஞ்சூர் (100 எம்.எல்.டி)-ல் செயல்பட்டுவரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் அளிக்கப்பட்டது.

பின்னர், கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய நீரேற்றும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், கழிவு நீரகற்று பணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்தில் செயல்பட்டுவரும் 321 கழிவுநீரேற்று நிலையங்கள் மற்றும் 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுத்திகரிப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.   

சென்னையில் உள்ள கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையங்களைப் பற்றி இக்குழுவினர் கேட்டறிந்தனர். கோயம்பேட்டில் செயல்பட்டுவரும் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவுநீர் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் குறித்து குறும்படம் இக்குழுவினருக்கு திரையிடப்பட்டது. மேலும், இந்நிலையத்தில்  சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக சென்னையை அடுத்த 60 கி.மீ தொலைவிலுள்ள சிப்காட் நிறுவனத்திற்கு சொந்தமான இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைபாக்கம், வல்லம் வடகல், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்ட இக்குழுவினர் சென்னை குடிநீர் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, டென்மார்க் தூதரகத்தின் அலுவலர்கள் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநர் இராஜ கோபால் சுன்கரா, தலைமைப் பொறியாளர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், மேற்பார்வைப் பொறியாளர் அ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Koyambedu Wastewater Treatment Plant ,Christian Winthal Wind ,Permanent Secretary of State ,Danish Ministry of the Environment , Christian Winthal Wind, State Permanent Secretary of the Danish Ministry of the Environment inspects the Koyambedu Wastewater Treatment Plant.
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...