ஸ்ரீவைகுண்டம்: வெள்ளூர் சிவன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் சிவன் கோயிலில் மாசி திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமி நடுநக்கர் மத்தியபதீஸ்வரர், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் தேருக்கு எழுந்தருளினர்.
தொடர்ந்து 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற காவல்துறை தலைவருமான மாசானமுத்து, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என திரளானோர் உற்சாகத்துடன் தேர் வடம் பிடித்தனர். மதியம் 2.10 மணியளவில் நிலையை மீண்டும் தேர் வந்தடைந்தது.
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை. சுரேஷ், வெள்ளூர் ஊர் தலைவர்கள் சங்கரபாண்டியன், சொர்ணபாண்டியன், தளவாய், ஆண்டி, முருகன், விவசாய சங்க முன்னாள் தலைவர் அலங்காரம், பஞ். தலைவர் குமார்பாண்டியன், பஞ். முன்னாள் தலைவர் முத்தையா, பஞ். துணை தலைவர் வேல்மயில் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், கோயில் நிர்வாக அதிகாரி நம்பி, செயல் அலுவலர் கண்ணன், கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாச்சாரியார், அன்னதான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் இசக்கி, முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
