×

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஊட்டி நகராட்சி முழுவதும் விளையாட்டு உபகரணங்கள்

*ஆ.ராசா எம்.பி வழங்கினார்

ஊட்டி : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஊட்டி நகராட்சி கவுன்சிலர்களுக்கு 26 வகையான விளையாட்டு உபகரணங்களை ஆ.ராசா எம்.பி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு 26 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலும் தற்போது விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். ஆணையாளர் கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், விசாலாட்சி, கே.எம்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், ஊட்டி நகராட்சி 36 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு 26 வகையான(மட்டை பந்து,கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம், சிலம்பம் குச்சி உள்ளிட்டவை) விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என்றார். நீலகிரி மாவட்டத்திலும் ஏற்கனவே ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, எதிர்வரும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.

மேலும், தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களை தயார் படுத்தி வருகிறார். இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையை மாற்றி அமைத்துள்ளார்.

இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் தற்போது தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் சென்னையில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், குன்னூர் நகராட்சி துணைத்தலைவர் வாசிம்ராஜா, கவுன்சிலர்கள் தம்பி இஸ்மாயில், ரமேஷ், செல்வராஜ், கீதா, நாகமணி, மேரிபுளோரினா, வனிதா, கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty Municipality ,Youth Welfare and Sports Department ,A.Raza ,Ooty ,Youth Welfare and Sports Development Department ,Tamil Nadu Government Youth Welfare and Sports Development Department… ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...