சேலம்: திரிபுரா, மேகலாயா, நாகலாந்து ஆகிய 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை திடீரென ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1,118.50, சேலத்தில் ரூ.1,136.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் ரூ.351 அதிகரித்து ரூ.2,268ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால், நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அப்போது, சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1,068.50, சேலத்தில் ரூ.1,086.50 எனவும், டெல்லியில் ரூ.1,053, மும்பையில் ரூ.1,052.50, கொல்கத்தாவில் ரூ.1,079 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதன்பிறகு அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், சிலிண்டர் விலையை குறைக்காமல் ஒரேநிலையாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வைத்துக்கொண்டது. திரிபுரா, நாகலாந்து, மேகலாயா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்து அறிவிப்பு வெளியானது. இதனால், நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1,100ஐ தாண்டிள்ளது.
சென்னையில் ரூ.1,118.50, சேலத்தில் ரூ.1,136.50, டெல்லியில் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த 7 மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் தற்போது திடீரென ரூ.50 அதிகரிக்கப்பட்டதால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், 19 கிலோ கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை நேற்று ரூ.351 அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் ரூ.1917ல் இருந்து ரூ.351 அதிகரித்து ரூ.2,268ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1870ல் இருந்து ரூ.351 அதிகரித்து ரூ.2221 ஆகவும், டெல்லியில் ரூ.2119.50 ஆகவும், மும்பையில் ரூ.2071ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2221.50 ஆகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், ஓட்டல், டீ கடைகளில் உணவு பண்டங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு ஒன்றிய அரசுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
3 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த 2020 மே மாதம் சென்னையில் ரூ.569.50 ஆக இருந்தது. இதுவே 2 ஆண்டிற்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில், ரூ.1,015.50 ஆகவும், ஜூலையில் ரூ.1068 ஆகவும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து, 2023 மார்ச்சில் ரூ.1118.50 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி 3 ஆண்டுகளில் மட்டும் இரு மடங்காக ரூ.548 உயர்ந்துள்ளது. 7 மாதங்களுக்கு பின்பு இம்மாதத்தில் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால், வரும் ஆண்டுகளில் காஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்ய முடியாத நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்படுவார்கள். மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் குமுறுகின்றனர்.
மானியமும் இல்லை
வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கான மானியமும் 90 சதவீதம் பேருக்கு நிறுத்தப்பட்டு விட்டது. மீதியுள்ள 10 சதவீத ேபருக்கும் ரூ.30 என்ற நிலையில்தான் மானியம் கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள், முழு தொகையாக ரூ.1100க்கு மேல் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பெட்ரோல், டீசல் லிட்டர் விலை ரூ.105 என்ற நிலைக்கு உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களின் விலையும் ஒருபுறம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விலையும் ரூ.1100ஐ தாண்டி விட்டதால், குடும்பத்தலைவிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
விறகுகளை தேடி காட்டுக்கு செல்லும் பெண்கள்
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு, மதுரையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,080ல் இருந்து, ரூ.1,130 வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண்கள் காட்டுப்பகுதிக்கு சென்று விறகு சேகரித்து வருகின்றனர். 4 முதல் 8 பெண்கள் வரை சேர்ந்து கூட்டமாக சென்று, விறகு சேகரித்து தலைச்சுமையாக வீடுகளுக்கு கொண்டு வருகின்றனர். காஸ் அடுப்போடு வெந்நீர் வைப்பது போன்ற வேலைகளுக்கு விறகு அடுப்பை பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து திருப்புவனம் அருகே அல்லிநகரத்தைச் சேர்ந்த முத்துச்செல்வி கூறுகையில், ‘‘எங்கள் குடும்பத்திற்கு ஒரு சிலிண்டர் அதிகபட்சமாக 40 நாட்கள் வரை வரும். காஸ் விலை தற்போது டெலிவரியோடு சேர்த்து ரூ.1,200 நெருங்கி விட்டது. அவ்வப்போது விறகு அடுப்பையும் இடை இடையே பயன்படுத்தினால்தான், எங்களுக்கு கட்டுப்படியாகும்’’ என்றனர்.
