சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,960-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக தங்கம் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தங்க நகை தயாரிப்பு உற்பத்தியில் மும்பை முதலிடத்திலும், கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக கோவை நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளன. சிறிய, பெரிய, நடுத்தரம் என 3,500 நகை கடைகள் உள்ளன. தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக சென்னை மற்றும் மதுரையில் நகை தயாரிப்பு உற்பத்தி அதிக அளவு செய்யப்படுகிறது.
கோவையில் இருந்து மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் தங்க நகை தொழிலை மட்டுமே நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். கோவையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலை நம்பி உள்ளனர். தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால், கோவையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு டன் தங்கம் விற்பனை சரிந்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நாடு கடத்தப்பட்டு அமெரிக்காவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் எதிரொலியாக தங்கம் மீதான விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்களிடையே தங்கம் வாங்கும் சக்தி குறைந்து தங்க நகை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

