நிலம் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.20 லட்சம் பாஜ பிரமுகர் மோசடி: போலீசில் புகார்

சென்னை:  சென்னை புழல் கண்ணப்ப சாமி நகர் 15வது தெருவை சேர்ந்தவர் ரவி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாந்தி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் தனது கணவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார்.  இந்த பணத்தில் புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அப்போது, கண்ணப்ப சாமி நகரை சேர்ந்த பாஜ பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குமார் (50) என்பவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்து நிலம் வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

ஆனால், பணம் கொடுத்து சில மாதங்களாகியும் இடம் வாங்கி தராமல் அவர் அலைக்கழித்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த சாந்தி, பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கியுள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார். பின்னர், மீண்டும் குமாரிடம் நேரில் சென்று கேட்டபோது ‘நான் பாஜவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். உனது பணத்தை தர முடியாது’ என மிரட்டி உள்ளார். இதுகுறித்து, புழல் குற்றப்பிரிவு போலீசில் சாந்தி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: