ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல, இன்று முதல் 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 3 மற்றும் 4ம் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 2,408 பேர் கச்சத்தீவு செல்ல உள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களின் ஆவணங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, அடையாள அட்டைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பக்தர்களை கச்சத்தீவுக்கு ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு தகுதிச் சான்று வழங்க மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்ய உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கச்சத்தீவு புறப்படும் பக்தர்கள் வசதிக்காக பந்தல்கள் அமைப்பது மற்றும் திருவிழா நடைபெறும் நாட்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று முதல் 5ம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால், இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் கரையில் நிறுத்தப்படும். கச்சத்தீவு திருவிழா நாளை மறுநாள் துவங்கவுள்ள நிலையில், கச்சத்தீவு செல்லும் படகுகள் ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.
