×

தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணம் சென்னை திரும்பிய 67 பேரை வரவேற்றார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலைய துறையின் சார்பில், ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்திற்கான முதல் அணியில் பயணித்து காசி தரிசனம் முடிந்து திரும்பியவர்கள் நேற்று காலை ரயில் மூலம் எழும்பூருக்கு வந்தனர். அவர்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பொன்னாடை அணிவித்தார். அப்போது, அவர்களிடம் ஆன்மிக பயணம் குறித்து கேட்டறிந்தார். பயணிகள் சார்பில் அமைச்சருக்கு காசி தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் துணை பொது மேலாளர் சுப்பிரமணி, இணை ஆணையர்கள் சுதர்சனம், தனபால் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கையில் 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 27வது அறிவிப்பாக ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணத்தை அறிவித்திருந்தோம்.

அதன்படி முதல் அணியில் 67 பேர் கடந்த 22ம் தேதி ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு காசிக்கு சென்றுவிட்டு, மகிழ்ச்சியோடு சென்னை திரும்பிய அனைவரையும் வரவேற்று வழியனுப்பினோம். இந்த ஆன்மிக பயணத்திற்குண்டான செலவுதொகை 50 லட்சத்தை அரசு மானியமாக வழங்கி இருக்கிறது. 200 பேரை காசிக்கு அழைத்து செல்லும் பயண திட்டத்தில் முதற்கட்டம் இன்றைக்கு முடிவுற்று இருக்கிறது. 2வது கட்டம் மார்ச் 1ம் தேதியும் (இன்று), 3வது கட்டம் மார்ச் 8ம் தேதியும் தொடங்க இருக்கிறது. 200 பேரை 3 பிரிவுகளாக பிரித்து காசிக்கு அழைத்து செல்கிறோம். இந்த பயணத்திற்கு 590 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற முதற்கட்ட பயணத்தில் 14 மாவட்டங்களை சேர்ந்த 67 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக 2023-24ம் ஆண்டு தொடங்கும்போது, இந்த ஆன்மிக பயணத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை அழைத்து செல்வோம். போட்டி என்று எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு அரசு அறிவித்த இந்த திட்டத்திற்குதான் போட்டியாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது கடந்தாண்டே அறிவிக்கப்பட்ட திட்டம். மகா சிவராத்திரி விழா இந்தாண்டு 5 இடங்களில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறோம், என்றார்.


Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Tamil Nadu ,Kashi , Minister Shekharbabu welcomed 67 people who returned to Chennai from Tamil Nadu on a spiritual journey to Kashi
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...