×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலத்தில் காணிக்கையாக கிடைத்த 180 பவுன் நகைகளை அபகரிக்க முயற்சியா?: பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலத்தில் கிடைத்த 180 பவுன் நகைகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல ஒரு மாதத்திற்கு மேல் தாமதமானது. அந்த நகைகளை அபகரிக்க நடந்த முயற்சியாக இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. டிசம்பர் 27ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் மண்டல காலம் நிறைவடைந்தது. இதன்பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஜனவரி 20ம் தேதி காலை நடை சாத்தப்பட்டது. அன்றுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைந்தது. கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டதால் இம்முறை சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயில் வருமானம் அதிகரித்தது. மண்டல, மகரவிளக்கு காலத்தில்  மொத்த வருமானம் 370 கோடியை தாண்டியது.  சபரிமலை கோயில் வரலாற்றில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் வருமானம் 350 கோடியை தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.


இம்முறை பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம் மற்றும் வெள்ளியும் அதிகரித்தது. இதுவரை 400 பவுன் தங்கம் கிடைத்துள்ளது. கோயிலுக்கு காணிக்கையாக கிடைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை நடை சாத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஆரன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். மகரவிளக்கு காலமான டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை காணிக்கையாக 180 பவுன் தங்கம் கிடைத்தது. ஜனவரி 20ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. அதன்பின் ஒரு வாரத்திற்குள் இந்த தங்கம் ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் 180 பவுன் தங்கம் ஆரன்முளாவிலுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அதுவரை இந்த தங்கம் சபரிமலையில் இருந்ததா, அல்லது வேறு எங்காவது வைக்கப்பட்டிருந்ததா என தெரியவில்லை. காணிக்கையாக கிடைத்த தங்கம் இதுவரை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட வில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து விசாரணை நடத்த திருவாபணம் ஆணையாளர் பைஜுவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தான் 180 பவுன் தங்கம் சபரிமலையில் இருந்து ஆரன்முளாவுக்கு தாமதமாக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



Tags : Sabarimala Ayyappan , An attempt to seize 180 pounds of jewels donated during Makaravilakku period at Sabarimala Ayyappan temple?: Sensational information
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு