சென்னை: தமிழ்நாட்டிற்கு வெளியேயும், அயல் நாடுகளில் வேலை, கல்வி, வியாபாரம், வணிகம் நிமித்தமாக சென்று வசிக்கும் அயலகத் தமிழர்களின் நலன்கள் தொடர்பாக திட்டமிடவும், புதிய நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் அமைக்கப்பட்ட “அயலகத் தமிழர் நல வாரியத்தின்” முதற் கூட்டம் இன்று (28.02.2023) வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. இதில் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர், தமிழ் இணையக்கல்வி கழகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு) ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
வாரியத்தின் உறுப்பினர் செயலர், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இத்துறையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் இத்துறையால் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக அறிமுகம் செய்ததுடன், வாரியத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் வாரியத்தால் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக கூட்டப்பொருளை சமர்ப்பித்தார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்தவாறு அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், அவர்களுக்கு காப்பீட்டு திட்டம், தமிழகத்திற்கு வெளியே மற்றும் அயல்நாடுகளுக்கு வேலை நிமித்தம் சென்று அங்கு இறந்து போகும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி, பெண் குழந்தைகளுக்கு திருமண உதவி திட்டம், 24x7மணிநேர தொலைபேசி உதவி மையம், தரவுத்தளம், மாவட்டங்களில் முன் பயண புத்தாக்க பயிற்சி மையம் அமைத்தல் ஆகிய நலத்திட்டங்களை வாரியம் மூலமாக செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மேலும் வாரியத்தின் நிர்வாக செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.