சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு எடுகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 25ம் தேதி (சனிக்கிழமை) நடத்தியது. இந்த தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 27,306 பேரும், பெண்கள் 27,764 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். இத்தேர்வில் காலையில் தகுதி தாள் தேர்வும், பிற்பகலில் பொது அறிவுத் தாள் தேர்வும் என 2 தாள்களாக தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் நடந்தது. இதற்காக 186 இடங்களில் 280 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
காலையில் நடந்த தேர்வில் வருகைப்பதிவேட்டில் உள்ள பதிவெண்ணும், வினாத்தாள் பதிவெண்ணும் மாறி இருந்ததால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னை உள்பட பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வு தாமதமாகவே தொடங்கி நடந்து முடிந்தது. சில தேர்வு மையங்களில் வினாத்தாள் பதிவெண் மாறி இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர்களிடம் இருந்து வினாத்தாள் பெறப்பட்டு, சற்று நேரம் கழித்து கொடுக்கப்பட்டது. இந்த இடைவெளியை பயன்படுத்தி சிலர் தேர்வு அறைக்கு வெளியே வந்து செல்போன், புத்தகங்களில் அதற்கான விடையை கண்டுபிடித்து எழுதியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருந்த போதிலும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இந்த தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின்காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில்காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணிவரை நடை பெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது.
அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராகஎ வ்வித இடர்பாடுமின்றி நடை பெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்க கொள்ளப்படமாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98% ற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத் தாட்கள் திருத்தும் போது கருத்தில் கொள்ளப்படும்.
தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-2 பொது அறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடை யூறுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சுமுகமாக நடை பெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-2ல் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப் பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமததிற்குக் காரணம். இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

