சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகமும், ச ஐ.ஐ.டியும் இணைந்து கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி சார்ந்த பணிகளை செயல்படுத்துவது, ஒருங்கிணைந்த பி.எச்.டி., படிப்புகள் குறித்த செயல்பாடு, இணைய வழி எம்.டெக் படிப்புகளை நடத்துவது, கருத்தரங்குகள் மற்றும் கல்வி கூட்டங்களை ஒருங்கிணைப்பது, குறுகிய மற்றும் நீண்டகால படிப்புகளை அறிமுகம் செய்வது, கடல்சார் அங்கத்திற்கான படிப்புகளை ஏற்படுத்துவது, தொழிலகங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது என இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடசார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர், சென்னை ஐஐடி இயக்குனர் மற்றும் பேராசிரியர் காமகோடி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கலாச்சார பல்கலைக்கழகத்தின் டீன் ராஜூ பாலாஜி, ஐ.ஐ.டி டீன் மற்றும் பேராசிரியர் முரளி ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், கடல் சார் சம்பந்தமான ஆராய்ச்சிகள் அதிகளவில் வளர்ந்து வருகிறது. ராக்கெட் ஏவுதளங்கள், ஆழ்கடல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்யப் போகிறோம். இதன் மூலமாக புயல், கடல் சீற்றம் வரும் சமயங்களில் அதனை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலமாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 5ஜி தொழில்நுட்பம் மூலமாக கடல் எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை தடுக்கும் வகையில் இது பயனுள்ளதாக இருக்கும். கடல் சார் சம்பந்தமான ஆராய்ச்சிகள் அனைத்தையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல போகிறோம். இப்போதுதான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. என்றார்.