விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடி விசாரணை முடிந்து 6 பேர் சிறையில் அடைப்பு: இரும்பு சங்கிலியால் கட்டி வைத்ததாக நிர்வாகி வாக்குமூலம்

விழுப்புரம்: அன்புஜோதி ஆசிரமம் வழக்கில் கைதான 6 பேர் சிபிசிஐடி காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள் சிலர் மாயமானதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் வந்தது. இதையடுத்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 6 பேரிடம் கடந்த 3 நாட்களாக சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சிபிசிஐடி வட்டாரத்தில் கூறுகையில், ஆசிரம நிர்வாகி அவரது மனைவியிடம், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்தியதில், மாயமான ஜாபருல்லா, பெங்களூரு காப்பகத்திலிருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. மேலும், ஆசிரமத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களை அடித்து, சித்ரவதை செய்ததை நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ளார். இது வழக்கமாக நடைபெறுவதுதான். இவர்களை நல்வழிப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காகத்தான் அடித்ததாகவும், இரும்புசங்கிலியால் கட்டிவைத்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறினர். இதனைத்தொடர்ந்து பெங்களூரு காப்பக நிர்வாகி ஆட்டோராஜாவை கைதுசெய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: