×

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நாக் அவுட் அட்டவணை வெளியீடு

பெங்களூர்: இந்தியன் சூப்பர்  லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 9வது தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிடைந்த நிலையில் 6 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.   முதல் 2 இடங்களை பெற்ற  மும்பை சிட்டி எப்சி, ஐதராபாத் எப்சி அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுகளில் விளையாட உள்ளன.

அடுத்த 4 இடங்களை பிடித்த  ஏடிகே மோகன் பகான், பெங்களூர் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, ஒடிஷா எப்சி அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதன்படி பெங்களூரில் மார்ச் 3ம் தேதி நடக்க உள்ள முதல் நாக் அவுட் சுற்றில்  பெங்களூர்- கேரளா அணிகளும், கொல்கத்தாவில் மார்ச் 4ம் தேதி நடைபெறும் 2வது நாக் அவுட் சுற்றில் ஏடிகே-ஓடிஷா அணிகளும் மோதுகின்றன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதி சுற்றுகளுக்கு தகுதிப் பெறும்.

முதல் நாக் அவுட்  சுற்றில் வெற்றிப் பெறும் அணி மும்பை அணியுடன் மார்ச் 7, 12 தேதிகளில் மோதும். அதே போல் 2வது நாக் அவுட் சுற்றில் வெற்றிப் பெறும் அணி  ஐதராபாத் அணியுடன் மார்ச் 9,13தேதிகளில் களம் காணும். அவற்றில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 18ம் தேதி இறுதி ஆட்டத்தில் விளையாடும். அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் வெற்றி பெறும் அணிகளுக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : ISL , ISL Football Match Knockout Table Release
× RELATED நாளை ஐஎஸ்எல் பைனல் மோகன்பகான்-மும்பை மோதல்