×

திருவொற்றியூரில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்கப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தகவல்

தண்டையார்பேட்டை: கேந்திர வித்யாலயா பள்ளி, திருவொற்றியூர் பகுதியில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். வடசென்னையில் நடுத்தர மக்களும், ஏழை மக்களும் அதிகம் வசிக்கிறார்கள். வடசென்னை பகுதி பின்தங்கிய பகுதியாக உள்ளது. இதனை மேம்படுத்தவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த பகுதி மக்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கும்  கோரிக்கை வைத்தனர்.

 இதைனையடுத்து தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இங்கு மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி ஆர்கே நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்தனர். இதில், திருவொற்றியூர் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான  இடத்தை தேர்வு செய்தனர். அதேபோல் ஆர்கே நகர் பகுதியில் சென்னை துறைமுகம் குடியிருப்பு வளாகத்தில் இடத்தை தேர்வு செய்தனர்.

இந்த இரு இடங்களிலும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த இடத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்கலாம் என்பதை முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் கேந்திர வித்யாலயா சங்கத்தின் உதவி ஆணையர் ருக்மணி, தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர், தென்னக ரயில்வே அதிகாரியை சந்தித்து இந்த ஆண்டு கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்கப்பட உள்ளது  என்று கூறினர். ஏற்கனவே 3 ஏக்கர் நிலம் வழங்கிய நிலையில், மேலும் இதற்காக 2 ஏக்கர் நிலம் பள்ளிக்கு வழங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக பள்ளி நடத்துவதற்கு இடம் கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதனால், இந்த ஆண்டு கேந்திர வித்யாலயா பள்ளி திருவொற்றியூர் பகுதியில் அமைக்கப்படும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை துறைமுகம், சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஎல் பகுதியில் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். இவர்கள் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்கினால் வடசென்னை பகுதி தரம் உயரக் கூடும்.


Tags : Kendra Vidyalaya School ,Galaniti Veerasamy , Member of Parliament Kalanidhi Veerasamy to start Kendra Vidyalaya School, Thiruvottiur
× RELATED கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு