×

அதிமுக வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீசுடன் ஒரு ஓட்டுக்கு ₹2,000, வெள்ளி கொலுசு, குங்குமச் சிமிழ், விளக்கு விநியோகம்: வீடு வீடாக வழங்க வெளி மாவட்டத்தில் இருந்து ஆட்கள் குவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது எதுவும் செய்யாததால், தற்போது அவர் வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம், ‘10 வருஷம் என்ன பண்ணீங்க’ என கேட்டு விரட்டியடித்து வருகின்றனர். இதனால் இந்த தேர்தலில் டெபாசிட்டாவது வாங்கி விட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதிமுக ஓட்டு என்று அவர்கள் கண்டறிந்து உள்ள வீட்டு வாசலில், ‘அதிமுக ஓட்டு’ என சுவரில் குறிப்பிட்டு, வெள்ளி கொலுசு, குக்கர், ₹2000 ரொக்கம் என வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர்.தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள  நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது கடந்த 3  நாட்களாக கனஜோராக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள்  கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு  பணம் மற்றும் பரிசு பொருட்கள் என தனித்தனியாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக இரவு நேரங்களில் இதுபோன்ற பட்டுவாடா நடக்கிறது. ஈரோடு திருநகர்  காலனி, சிந்தன் நகர், கிருஷ்ணம்பாளையம், அசோகபுரம், அன்னை சத்யா நகர்  உள்ளிட்ட பகுதிகளில் இந்த பண விநியோகம் மற்றும் பரிசு பொருட்கள்  விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு ஈரோடு  ராஜாஜிபுரத்தில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வெள்ளி குங்குமச்சிமிழ்,  காமாட்சி விளக்கு, சிறிய வெள்ளி கிண்ணம் உள்ளிட்டவைகளுடன் அதிமுக  வேட்பாளரின் பெயர், சின்னம் உள்ளிட்டவைகளுடன் கூடிய நோட்டீஸ் ஆகியவற்றை  விநியோகித்துள்ளனர். பிற இடங்களில் வேட்டி, சேலை, ஒரு ஓட்டுக்கு ₹2  ஆயிரம் பணம் ஆகியவை விநியோகம் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யவும், பிரசாரம் செய்யவும் உள்ளூர் அதிமுகவினர் விருப்பம் காட்டாததால் சேலம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


* அதிமுக கொடுத்த குட்டி வெள்ளி டம்ளரில் கடை கடையாக டீ கேட்டு வாலிபர் அடம் பல பகுதிகளில் நேற்று காலை அதிமுக சார்பில் குட்டி வெள்ளி டம்ளர் கொடுத்துள்ளனர். இதை கையில் எடுத்து கொண்டு டீ கடைக்கு சென்ற ஒரு வாலிபர், ஒரு டீ போட சொல்லி, அதிமுகவினர் கொடுத்த வெள்ளி டம்ளரை கொடுத்து உள்ளனர். அதற்கு டீ கடைக்காரர், ‘இந்த கிளாஸ்ல எப்படின்னா டீ போட முடியும்’ என கேட்கிறார். ‘அண்ணா காலை இரட்டை சிலை சின்னத்துல இருந்து வந்து கொடுத்துட்டு போனாங்க. எதுக்காவது யூஸ் ஆகுமானு பாருன்னா’ என அந்த வாலிபர் கூறுகிறார். ‘இதில் டீ போட முடியாது’ என கடைக்காரர் தெரிவித்ததால், இன்னொரு கடைக்கு அந்த வாலிபர் சென்றார். அங்கும் அதிமுக கொடுத்து குட்டி வெள்ளி டம்ளரை கொடுத்து, டீ போட்டு கொடுக்க சொன்னார்.

அதற்கு டீ கடைக்காரர், ‘என்கிட்ட இருக்க கிளாஸ்லதான் டீ போட்டு தருவேன்’ என்று தெரிவித்தார். ‘அண்ணா இது அதிமுகவில் இருந்து கொடுத்தாங்க..’ என அந்த வாலிபர் கூறுகிறார். அதற்கு டீ கடைக்காரர், ‘அதெல்லாம எனக்கு தெரியாது. என்னுடைய கடையில நான் இந்த கிளாஸ்ல (கண்ணாடி கிளாஸ்ல) தான் டீ போடுவன். இந்த கிளாஸ்ல (அதிமுக கொடுத்த குட்டி வெள்ளி டம்ளர்) எப்படி டீ போடுவன். இது எதுக்குமே யூஸ் ஆகாதுப்பா’ என்று கூறினார்.  உடனே, ‘இதை வெச்சு நான் பண்றது’ என அந்த வாலிபர் கேட்கிறார். அதற்கு அந்த கடைக்காரர், ‘நீ அவங்கிட்ட கேளுங்க... நம்ம கிட்ட கேட்டு ஒரு பிரயோஜனம் இல்லை’ என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

* அதிமுக பகுதி செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு அதிமுக பகுதி செயலாளர் ஜெயராஜ் வீட்டில் கடந்த 20ம் தேதி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்று வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் கேமராமேனை ஜெயராஜ் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாக்கி, கேமராவை பிடுங்கி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், அதிமுக பகுதி செயலாளர் ஜெயராஜ் உட்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், அதிமுக பகுதி செயலாளர் ஜெயராஜ் மனைவி திலகவதி, ‘நிருபர் மற்றும் கேமராமேன் அத்துமீறி எங்கள் வீட்டில் நுழைந்து குளியலறை, சமையலறை பகுதியில் புகுந்து வீடியோ எடுத்தனர்’ என புகார் அளித்து உள்ளார்.

* தரமற்ற சேலை விநியோகம் தொண்டர்கள் புலம்பல் கடந்த 3 நாட்களாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா  மற்றும் பரிசு பொருட்களை விநியோகித்து வருகின்றனர். அசோகபுரம் பகுதிக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது தலைமையில் வாக்காளர்களுக்கு கடந்த 2 நாட்களாக அதிமுக சார்பில் சேலைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறைந்த விலையிலான தரமற்ற சேலைகளை விநியோகித்துள்ளனர். இதனால், தரமற்ற சேலைகளை வழங்கிய அதிமுகவினரை முற்றுகையிட்டு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதை பார்த்த தொண்டர்கள், ‘பணம்தான் அள்ளி வீசுறாங்களே... ஆனா கொடுக்கிற பொருளை கூட தரமா கொடுக்க மாட்றாங்க’ என புலம்பி வருகின்றனர்.



Tags : ₹2,000 per ballot with notice containing AIADMK candidate's name, symbol, silver bangle, saffron shimli, lamp Distribution: Mobilization of people from outside districts for door-to-door delivery
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...