×

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைந்து உழவர் பெருமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்களைப் பொறுத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உடனடித் தேவை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப்புக் கிடங்குகளில் யூரியா 4,500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 3,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Peryakarupan ,Chennai ,Tamil Nadu ,operation ,K. R. ,Peryakarapan ,Mu. K. ,Stalin ,Dinakaran ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...