அரியவகை குரங்கு கடத்தலில் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்: ஆவடி கமிஷனர் அதிரடி

வளசரவாக்கம்: செங்குன்றம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு முன் செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் அரியவகை உராங்குட்டான் குரங்குகளை கடத்திக்கொண்டு வந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், இதுதொடர்பாக கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக, லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களை போலீசார் தப்பியோட விட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில், அரியவகை உராங்குட்டான் குரங்குகள் கடத்தலில், சம்பந்தப்பட்ட கும்பலிடம் செங்குன்றம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, வழக்குப்பதிவு செய்யாமல் தப்பியோட விட்டது தெரியவந்தது.இந்நிலையில், செங்குன்றம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 4 காவலர்களிடம் நடந்த விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரிடம் வழங்கினர்.

இதை தொடர்ந்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்ட கும்பலை தப்பவிட்டதற்காக, நேற்று  முன்தினம்  மாலை எஸ்ஐ அசோக் மற்றும் காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: