துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் வேலு (37). திருவான்மியூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் பணி முடித்துவிட்டு, பெருங்குடி பகுதி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த 4 ஆசாமிகள் திடீரென தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, வேலுவிடம் இருந்த செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த வேலு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, கண்ணகி நகரில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை பரத் (25), சக்திவேல் (25), கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வினித் (எ) பப்லு (22), கார்த்திகேயன் (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து, ஐடி ஊழியரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தது தெரிந்தது. இவர்கள் மீது யானைகவுனி, அண்ணா சதுக்கம், மெரினா, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.