×

தர்மபுரி அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது-உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் பறிமுதல்

தர்மபுரி : தர்மபுரி அருகே, 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, 20 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாக, எஸ்பி., அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியின் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட தேசிய சுகாதார திட்ட நியமன அலுவலர் டாக்டர் பாலாஜி தலைமையில், உதவியாளர் கனல்அரசன், இளநிலை உதவியாளர் கதிரவன் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன், நாயக்கன்கொட்டாய் பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(60) என்பவர், தனது வீட்டின் முன்புறம் உள்ள டூவீலர் ஸ்டாண்டில், 4 கட்டில்கள் போட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில், கண்ணன் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, ஓமியோபதி மருத்துவரான தனது தந்தை நடராஜனுக்கு உதவியாக இருந்ததும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடராஜன் இறந்து விட்டதால், ஓமியோபதி மற்றும் ஆங்கில மருத்துவ சிகிச்சையை, பொதுமக்களுக்கு அளித்து வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், பல்வேறு சிகிச்சைகள் பெற்று வந்துள்ளனர். இதையடுத்து மருந்து மாத்திரைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் டாக்டர் கண்ணன் என்ற சீல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர்.


Tags : Dharmapuri , Dharmapuri: Police yesterday arrested a fake doctor near Dharmapuri who had studied up to 10th standard and had been providing English medical treatment for 20 years.
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்