×

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கியிருந்த 6 பேர் கும்பலை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 அரிவாள், 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 6 பேர் கும்பல் ஆயுதங்களை மறைத்து வைத்து நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், எஸ்பிளனேடு காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், சென்னை ஓட்டேரி மங்களபுரத்தை சேர்ந்த யஸ்வந்த் ராயன் (25), பெரம்பூரை சேர்ந்த கேளப் பிரான்சிஸ் (25), கோகுல் நாத் (20), கார்த்திக் (25), அயனாவரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20), ஜெய்பிரதாப் (19) என்பது தெரியவந்தது.

இதில் யஸ்வந்த் ராயன் மீது ஓட்டேரி காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. கேளப் பிரான்சிஸ் மீது ஓட்டேரி, அபிராமபுரம் காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. யஸ்வந்த் ராயன், கேளப் பிரான்சிஸ் ஆகியோருக்கும், அயனாவரத்தை சேர்ந்த சரண் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் யஸ்வந்த் ராயனை சரணும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வெட்டியுள்ளனர். இதில் யஸ்வந்த் ராயன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசார் சரணை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

மேலும் சரணை கொலை செய்ய திட்டமிட்டு யஸ்வந்த் ராயன் தனது கூட்டாளி கேளப் பிரான்சிசுடன் காத்திருந்தார். சரணுக்கு போன் மூலம் யஸ்வந்த் ராயன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கும் உள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சரண் நீதிமன்றத்திற்கு வருவதை அறிந்து தீர்த்துகட்ட தனது கூட்டாளிகளுடன் யஸ்வந்த் ராயன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Barimuna ,Chennai Broadway Raja Annamalai Forum ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து