×

போதை ஆசாமியை கண்டித்த டிராபிக் போலீசுக்கு சரமாரி அடி, உதை: டாஸ்மாக் மேலாளர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையில் குடிபோதையில் தகராறு செய்த நபரை கண்டித்த டிராபிக் போலீசை சரமாரியாக அடித்து, உதைத்த டாஸ்மாக் மேலாளரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே நகரில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குடிபோதையில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த நபர், வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்துள்ளார்.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. அந்த சமயத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த போக்குவரத்து காவலர் முத்துச்செல்வன் சென்று அரைகுறை ஆடையுடன் போதையில் தகராறு செய்து கொண்டிருந்த நபரிடம் சென்று பேசியுள்ளார். அப்போது அந்த நபர், போக்குவரத்து காவலரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியதுடன், தாக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்து காவலர் உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து ஒருவர் ஓடிவந்து போக்குவரத்து காவலரின் கன்னத்தில் சரமாரியாக அடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர், ‘‘நான் போலீஸ்காரர், பணியை முடித்துவிட்டு செல்கிறேன். குடிபோதையில் தகராறு செய்ததால் அந்த நபரை பற்றி விசாரித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நபர், ‘‘நீ போலீசாக இருந்தால் எனக்கு என்ன பிரச்னை’’ என்று ஆபாசமாக பேசியதுடன் மறுபடியும் போலீஸ்காரரின் கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் வந்து காவலரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் (49) என்பதும், அவர் அரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வருவதும், குடிபோதையில் காவலரை தாக்கினார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது, ஆபாசமாக பேசுதல் (294), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), காயங்கள் ஏற்படுத்துதல் (323) மற்றும் கொலை மிரட்டல் (506) ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி காவலர் முத்துச்செல்வம் கூறும்போது, ‘‘எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், சென்னை புதுப்பேட்டையில் கடந்த 6 வருடமாக ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தேன். பின்னர் போக்குவரத்து காவலராக அண்ணாநகரில் கடந்த 2 மாதமாக பணியாற்றி வருகிறேன். நான் போக்குவரத்து காவலர் என்று சொல்லியும் பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் டாஸ்மாக் மேலாளர் அடித்துவிட்டார். இது மிகவும் வேதனையாக உள்ளது’’ என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tasmac , Tasmac manager arrested for slapping, kicking traffic police for reprimanding drug addict
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்