×

சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு: எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணி ‘பார்முலா’ என்னாகும்? அரசியல் தடைகளை உடைப்பது குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரசின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரசின் கூட்டணி பார்முலா குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும். அதேநேரம் இந்தாண்டு நடக்கும் 9 மாநில சட்டப் பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28.55 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2014  தேர்தலில் 19.52 சதவீதமாக குறைந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில்  19.70 சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும் 2019ம் ஆண்டில், காங்கிரஸ்  முந்தைய தேர்தலை விட எட்டு இடங்களை அதிகமாகப் பெற்றது. எனவே வரும் தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்பதால், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்கான ஆயத்த பணிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. வரும் 2024 தேர்தலில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், வடகிழக்கு மாநிலங்களின் சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை ஏதும் இல்லை.

அதேநேரம் தெலங்கானா, மேற்குவங்கத்தில் அதிக இடங்களை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பில்லை என்றாலும் கூட, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் எளிதாக அதிக இடங்களை கைப்பற்ற முடியும். ஏனெனில், இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் பெரும்பாலான வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதமும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் இணைந்தால், இரு கட்சிகளும் சேர்ந்து சுமார் 50 சதவீத வாக்குகளை பெறமுடியும். இதேபோல் தெலங்கானாவிலும் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி (முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சி), எதிர்கட்சியான பாஜகவிடம் கடும் சவாலை சந்தித்து வருகிறது.

இம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இருந்தாலும் மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியுடன் மம்தாவின் திரிணாமுல் கட்சியும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் கூட்டணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில், சந்திரசேகர ராவும், மம்தா பானர்ஜியும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், எதிர்கட்சிகளை வழிநடத்தவும் விரும்புகிறார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், சந்திரசேகர ராவ் - மம்தா பானர்ஜி ஆகியோரின் கருத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல்காந்தியின் சமீபத்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது, பெரும்பாலான எதிர்கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை களம் இறக்கினால் மட்டுமே, பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தியும் கூறியிருந்தார். அதேபோல் கட்சி அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘பாஜகவை காங்கிரசால் மட்டுமே தனித்து வீழ்த்த முடியாது’ என்று கூறியிருந்தார். எப்படியாகிலும் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய எதிர் கட்சிகள் மட்டுமின்றி பாஜகவுக்கு எதிரான இதர எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டணி பார்முலா திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Congress ,Chattisgarh , Congress conference in Chhattisgarh the day after tomorrow: What will be the alliance 'formula' to unite opposition parties? Key advice on breaking political barriers
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...