×

போக்குவரத்து தொழிலாளர்கள்,போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்: முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்

சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக நாங்குநேரியில் ஆறுமுகபாண்டியன் என்ற காவலர் அரசு பேருந்தில் சீருடையில் பயணம் செய்தார். அவரிடம் பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்கும்படி கேட்டதற்கு உங்கள் ஊழியர்கள் மட்டும் கட்டணமின்றி செல்லும் போது நாங்கள் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும் நானும் அரசு ஊழியர் தானே என பேசியது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

மேலும் காவலர்கள் வாரண்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க அனுமதி, இல்லையேல் கட்டாயம் டிக்கெட் பெற வேண்டும் என உத்தரவிட்டது. குறிப்பாக இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்ட நிலையில் காவலர் ஆறுமுக பாண்டி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இருந்த போதிலும் அவர் மீது விசாரணை நடைபெற்றது. அதே சமயம் விசாரணை நடைபெறும் போது ஆறுமுக பாண்டி மயக்கம் அடைந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழக போலீசார் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் செயல்பட தொடங்கினர்.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளை கண்டறிந்து நோ பார்க்கிங், சீட் பெல்ட் அணியாமல் செல்வது , அதிக பயணிகளை ஏற்றவது உள்ளிட்ட சட்ட விதிமீறல்களை காரணம் காண்பித்து அபராதம் விதிப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் செய்வது அறியாமல் திகைத்துபோய் உள்ளனர். குறிப்பாக இதற்கு முன்பு வாகனம் விபத்து நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையே இதுபோன்ற அபராதம் என்பது பெரும்பாலும் இருக்காது. ஆனால் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே சட்டரீதியான மோதல் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து தொழிலாளர்கள்,போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்: முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Transport Corporation ,Traffic Police Department ,K. Transport ,Stalin ,Arumugbandian ,Nanguneri ,Dinakaran ,
× RELATED தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில்...