×

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான இருவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை கும்பலை தேடுவதற்காக ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, அரியானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில் கடந்த 18ம் தேதி அரியானா மாநிலத்தில் கொள்ளை கும்பலின் முக்கிய தலைவன் ஆரிப் மற்றும் அவரது கூட்டாளி ஆசாத் ஆகிய இருவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

14 நாட்கள் காவலில் வைக்க அச்சமயம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க  குற்றவியல் நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். எந்தெந்த இடத்திற்கு சென்றார்கள்? எவ்வாறு கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டது? கொள்ளையில் யார் யார் ஈடுபட்டுள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே உள்ளது? என்பது குறித்து குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


Tags : Mountain ATM , T. Malai ATM robbery, police custody, court
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...