×

பழையாறு துறைமுகத்தில் புதியதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

*மீனவர்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் : பழையாறு துறைமுகத்தில் புதியதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தும் பணி நடைபெற்றது. துறைமுகத்தில் உள்ள படகு அதையும் தளம் மேம்படுத்தும் பணியில் அப்பகுதியில் விசைப்படகுகள் நிறுத்தப்படும் இடம் ஆழ்படுத்தப்பட்டது.

இதே துறைமுக வளாகத்தில் கழிவு நீர் வெளியேறி செல்வதற்காக அனைத்து பகுதிகளிலும் தேங்கும் கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து நீர் வெளியேறும் விதத்தில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இந்த கால்வாய்களில் வெளியேற்றப்படும் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சுத்திகரிக்கும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பல வகைகளில் பயன்படுத்தும் முறை கையாளப்படுவதற்காக வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

துறைமுக வளாகத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் தேவையான மரக்கன்றுகள் நடுவது, அதற்குரிய தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் பெற்று மரக்கன்றுகளை வளர்த்து பராமரிப்பதற்கு பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு பழையாறு துறைமுகத்தை மேம்படுத்தும் முக்கிய பணிகளில் இதுவும் ஒன்று என்ற நோக்கத்தில் ஆய்வு செய்தனர். அதன்படி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
திட்டமிட்டபடி மரக்கன்றுகளை நடும் பணியும் நடைபெறவில்லை.

சுத்திகரிப்பு நிலையம் துவக்கப்பட்டதோடு சில தினங்களில் இயக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த நிலையம் இயங்காமல் விடப்பட்டதால் இந்நிலையத்தின் கட்டிடம் உடைந்து சிதைந்து காணப்படுகிறது.உள்ளே அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் பழுதடைந்துவிட்டன. கழிவு நீரை சுத்திகரிப்பு நீராக மாற்றுவதற்கு அமைக்கப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டிகள் உடைந்து விட்டன. சுத்திகரிப்பு இயந்திரம் முழுமையும் பழுதாகி விட்டது.

இனி அறவே பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த சுத்திகரிப்பு நிலையம் மாறிவிட்டது. முறையாக இந்த நிலையத்தை பயன்படுத்தி கழிவு நீரை மேலேற்றி தண்ணீரை சுத்திகரிப்பு செய்தால் அந்த நீர் பழையாறு துறைமுக வளாகத்திலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள மரக்கன்றுகள் மற்றும் மரங்களை அடர்த்தியாக வளர்ப்பதற்கு பயன்படும். மேலும் இதர தாவரங்களையும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கான உரிய முறை கடைப்பிடிக்கப்படாமல் திறப்பு விழாவுடன் நின்று விட்டது. இதனால் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு செலவிடப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டன.

இதுகுறித்து பழையாறு மீனவர்கள் கூறுகையில், கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய நோக்கம் நிறைவேற்றப்படாததால் எந்தப் பயனும் இல்லாமல் சுத்திகரிப்பு நிலையம் வீணாகி கிடக்கிறது. பழையாறு துறைமுகத்தில் கழிவு நீர் வெளியேறி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய்களும் அடை பட்டும் மூடியும் கிடைக்கின்றன.

எனவே துறைமுகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் அடைப்புகளை நீக்கிவிட்டு மேம்படுத்து உரிய கால்வாய் அமைக்க வேண்டும். பயன்படாமல் கிடக்கின்ற சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படும் வகையில் புதிய கட்டிடம் கட்டி புதியதாக கழிவு நீர் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Palayar port , Kollidam: Fishermen have demanded that a new waste water treatment plant should be set up at Palyaru port.
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...