×

‘தீவிரவாதிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர்’ பாக்.கை சொந்த மண்ணில் விளாசிய பாலிவுட் பாடலாசிரியர்

லாகூர்: புகழ்பெற்ற உருது கவிஞர் பைஸ் அகமது பைஸை நினைவு கூறும் வகையில் 7வது பைஸ் திருவிழா லாகூரில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், ‘பாகிஸ்தான் நேர்மறையான, நட்பான நாடு என்ற அமைதிச் செய்தியை இந்தியர்களிடம் எடுத்துக் கூறுங்கள்’ என்றனர். அதற்கு பதிலளித்து பேசிய ஜாவேத் அக்தர், ‘‘நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லக் கூடாது. அது எதற்கும் தீர்வாகாது. தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. அதை தணிக்க வேண்டும்.

மும்பையை சேர்ந்த நாங்கள், எங்கள் நகரில் நடந்த தாக்குதலை பார்த்தோம். தாக்குதல் நடத்தியவர்கள் நார்வே, எகிப்தில் இருந்து வரவில்லை. அவர்கள் இன்னும் உங்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். எனவே, ஒரு இந்துஸ்தானியின் மனக்குறை இருந்தால், அதை நீங்கள் தவறாக எண்ணக் கூடாது. நஸ்ரத் பதே அலிகான் மற்றும் மெஹ்தி ஹசன் போன்ற பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் பெரிய விழா நடத்தி நாங்கள் பெருமைப்படுத்தி உள்ளோம். ஆனால் நீங்கள் லதா மங்கேஷ்கர் போன்றவர்களுக்கு விழாவை நடத்தவில்லை’’ என்றார். அவரது பேச்சுக்கு பலரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.இதற்கிடையே,  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டிவிட்டரில், ‘அவர், அவர்களது சொந்த மண்ணில் தாக்கினார்’ என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Pakistan , 'Extremists roam free' Bollywood lyricist hits home in Pakistan
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...