×

5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!

மாஸ்கோ: ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்கினார். ரஷ்யாவில் அசைக்க முடியாத அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக அவர் ரஷ்ய அதிபராகி உள்ளார். இதன் மூலம் ரஷ்ய வரலாற்றில் அதிகம் முறை அதிபராக இருந்தவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற அதிபர் புடின் இன்று அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

மாஸ்கோவின் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த ஆடம்பர விழாவில் அதிபர் புடின் பதவியேற்பு உரையை நிகழ்த்தினார்.அரசியலமைப்பு புத்தகத்தின் மீது கை வைத்து அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை புடின் தொடங்கி உள்ளார். 1999ம் ஆண்டில் கடைசி நாளில் செயல் அதிபராக பதவியேற்ற புடின், 2000ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்றார். 2008 வரை பதவியில் இருந்த அவர் பிறகு 2012 மே மாதம் முதல் இன்று வரை ஒற்றை அதிபராக நீடிக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் அதிபராக கால் நூற்றாண்டை நிறைவு செய்ய உள்ள புடின், 25 ஆண்டு கால பதவியில் அரசியல் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக நசுக்கி உள்ளார். சுதந்திரமான சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றினார். சர்வதேச எதிர்ப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் மீறி 3 ஆண்டாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளார். தற்போது 71 வயதாகும் புடின் தனது அடுத்த 6 ஆண்டு பதவிக்காலத்தில் என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!! appeared first on Dinakaran.

Tags : Putin ,Moscow ,Chancellor ,Russia ,Vladimir Putin ,
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு