×

பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் ஆலோசனைகள் வழங்கப்படும்-கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் உறுதி

ஊட்டி :  பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் ஆலோசனைகள் வழங்கப்படும் என கோவை வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், நீலகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் முதலாவது அறிவியல் ஆலோசனை குழுக்கூட்டம் ஊட்டி தொட்டபெட்டா வேளாண் அறியியல் நிலைய வளாகத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரைசெல்வி வரவேற்றார்.

ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ேஷக் மீரா, தோட்டக்கலை இணை இயக்குநர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்து பேசுகையில்: தேசிய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஒப்புதலோடு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையமானது புதிதாக 16.8.2022 முதல் செயல்பட துவங்கியுள்ளது.

இந்த வேளாண்மை அறிவியல் நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களுக்கும், விவசாய பெரு மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைவதோடு புதிய ரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவைகளை வயல்வெளி ஆய்வு, முதல்நிலை செயல்விளக்கம் மற்றும் பயிற்சிகள் மூலம் விவசாய பெருமக்களுக்கு கொண்டு சேர்க்கிறது.

தமிழ்நாட்டில் மலை மாவட்டங்களில் இயங்கும் ஒரே வேளாண்மை அறிவியல் நிலையம் இதுவாகும். இங்கு வேளாண்மையின் அங்கங்களான தோட்டக்கலை, பயிர் நுண்ணுயிரியல், பயிர் பாதுகாப்பு, வேளாண் விரிவாக்கம், சுற்றுப்புறச் சூழலியல் மற்றும் வனவியல் போன்ற வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பண்ணையில் பயிர் சாகுபடி முறைகள், நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், உயிர் உரங்கள் தயாரிப்பு முறைகள், காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவை செயல்விளக்க திடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

சுமார் 2545 சதுர கிமீ., அளவுள்ள தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமான நீலகிரியில் 6 வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும், 35 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. சுமார் 7.35 லட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் பிரதானமாக தோட்டக்கலை பயிர்களே பயிரிடப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான வாணிப முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. முக்கிய பயிர்களாக தேயிலை, மலை காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு, காப்பி மற்றும் வாசனை திரவியங்களும் குறிப்பிட்ட அளவில் பயிரிடப்படுகிறது. கோத்தகிரி வட்டத்தில் சிறு தானிய பயிர்களும், கூடலூர் வட்டத்தில் நெல் மற்றும் இஞ்சி பயிர்களும் பிரதானமாக பயிரிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 56 சதவீதம் வனங்களும், 14 சதவீதம் குடியிருப்புகளாகவும் உள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் அதாவது 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மற்றும் காய்கறிகள், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் காலநிலை மாறுபாடு மிக அதிகமாக அதாவது வெப்பநிலை குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால், அதற்கு தகுந்தார் போல் பயிர்களும் அதில் ஏற்படும் பிரச்னைகளும் மாறுபடுகின்றன.

இம்மாவட்ட விவசாயிகளின் தேவைகளை நிைறவேற்ற தோட்டக்கலை, வேளாண், கால்நடை, மீன்வளம், வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகள் மற்றும் விவசாய குழுக்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்படும். பழங்குடியினருக்கு வேளாண் ஆலோசனைகளும், வாழ்வியல் மேம்பாட்டு தொழில்நுட்பங்களும் வழங்கப்படும். தோட்டக்கலை பயிர்களின் மதிப்பு கூட்டுதல், தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.  

தற்போது இயற்ைக வேளாண்மை முறைகள் முக்கியத்துவம் பெற்று வருவதால் அத்தகைய கள ஆய்வுகள், ெசயல்விளக்க திடல்கள், அதனை சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகளும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளுடன் இணைந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் விவசாயிகள், பல்வேறு துறை சார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore Agricultural University ,Vice-Chancellor , Ooty: The Vice-Chancellor of the Coimbatore Agricultural University has assured that agricultural counseling will be provided to the tribal farmers
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...