×

பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட்டில் பணியாற்றிய பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கேரள பெயின்டர் கைது

*தென்காசி ரயில்வே போலீசார் அதிரடி

தென்காசி : தென்காசி அடுத்த பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட்டில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த பெயிண்டரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.நெல்லை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நித்யா சந்திரன் (37) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பெண் ஊழியர் குருசாமிபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பெண் ஊழியர் வழக்கம் போல் இரவு பணிக்கு வந்துள்ளார். சுமார் 8.30 மணிக்கு நெல்லை - செங்கோட்டை ரயில் அப்பகுதியை கடந்த பிறகு கேட் கீப்பிங் பணிக்காக அங்குள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென சட்டை அணியாமல் வந்த மர்ம நபர் ஒருவர் அறைக்குள் புகுந்து பெண் ஊழியரை பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பதறிபோன அந்த பெண் ஊழியர் கூச்சலிட்டுள்ளார்.

அப்போது அறையில் இருந்த தொலைபேசியால் அவரை தாக்கி விட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதற்கிடையே பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு அன்றிரவே பெண் வீடு திரும்பினார்.
தகவலின் பேரில் தென்காசி எஸ்பி சாம்சன், டிஎஸ்பி சகாய ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து ரயில்வே கேட் அருகே மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு  இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை தேடி வந்தனர். இதற்காக, கேரளாவுக்கு மர்ம நபர் தப்பி செல்வதை தடுக்க தென்காசி - கேரள எல்லை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியைச் சேர்ந்த முரளி மகன் அனீஸ் (28) என்பவரை புளியரை சோதனை சாவடி அருகே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட அனீஸ், கடந்த 15 நாட்களாக முன்பு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வருகை தந்துள்ளார். அப்போது பாவூர்சத்திரம் பகுதியில் தங்கிருந்தபோது, தினமும் நித்யா சந்திரனை நோட்டமிட்டுள்ளார். பெயிண்ட் அடிக்கும் பணி முடிந்து கேரளாவிற்கு திரும்பச் செல்ல இருந்த சூழலில் சம்பவத்தன்று நித்யா சந்திரன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அனீஸ், தனியாக இருந்த நித்யா சந்திரனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். ஆனால், அவர் கூச்சலிடவே பயத்தில் அங்கிருந்து அனீஸ் தப்பி ஓடியுள்ளார்.

அதன் பிறகு அறையில் சென்று தங்கி இருந்த அனீஸ் போலீசார் தேடுவது தெரிந்ததும் யாரிடமும் சொல்லாமல் கேரளாவிற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது போலீசாரிடம் புளியரை பகுதி வாகன சோதனையில் பிடிபட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனீஸ் மீது ஏற்கனவே கேரளாவில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் இதே போன்று நடந்து கொண்டதாக கேரள மாநிலம் குன்னிகோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்’ என்றனர்.

கேரள அமைப்புகளின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

ரயில்வே ஊழியரான நித்யா சந்திரன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தை சேர்ந்த அமைப்புகளும், சமூக வலைதளங்களிலும், தமிழகத்தில் பிற மாநில பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்று சித்தரிக்க முற்பட்டனர். ஆனால், தற்போது ரயில்வே போலீசார் நடத்திய துரிதமான விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி என்பது தெரிய வந்தது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக கேரளாவில் பரபரப்பை கிளப்பிய சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.

Tags : Kerala ,Pavurchatra , Tenkasi: A man from Kerala who sexually assaulted a female employee working at the railway gate next to Tenkasi.
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை