×

திண்டுக்கல்லில் உள்ள கரூர் சாலையில் 5 ஆண்டுகளாக நீடிக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள், மாணவர்கள் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் - கரூர் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பணிகளை விரைவில் முடித்து சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் - கரூர் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது. இதில் திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் ரயில்வே கேட் இருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு. மாவட்ட நிர்வாகம் ரயில்வே துறையுடன் இணைந்து ரயில்வே கேட்டினை அகற்றிவிட்டு பாலம் அமைக்க முடிவானது. பின்னர் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற ரயில்வேயின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதையடுத்து ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாதை பணிக்காக ரோட்டின் இரு பக்கங்களிலும் சிமென்ட் சுவர்கள் எழுப்பும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளது. இந்த பணிகளை ரயில்வே தரப்பில் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது மிகவும் தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி பெய்து வரும் மழையினால் சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இது சுரங்கப்பாதையை கழிவுநீர் கால்வாயாக மாற்றியுள்ளது.

இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கியதால், இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பெஸ்கி கல்லூரி, கூட்டுறவு நகர், எம்விஎம் நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. மேலும் இந்த பகுதி பொதுமக்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் என்ஜிஓ காலனி வழியாக திருச்சி ரோட்டிற்கு வந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். கரூர் ரோட்டில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் அதிகம் உள்ளன. இந்த சுரங்கப்பாதை பணிகளால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதே போல் கரூர் ரோட்டில் வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாததால் அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பல்வேறு கடைகளும் வாகன போக்குவரத்து முடங்கியதால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துயரங்களை பொதுமக்கள் அனுபவித்து வரும் நிலை தொடர்ந்தாலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலை தொடராமல் சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகர் என்பவர் கூறும்போது, கரூர் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியதாக இருப்பதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் சுரங்கப்பாதைக்கு பதிலாக இப்பகுதியில் மேம்பாலம் அமைத்திருந்தால் பணிகள் எப்போதோ முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்கும். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Karur Road ,Dintukulle ,Awadi , Dindigul, 5 years long railway tunnel works, public, students suffer
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்