×

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்

கோவை: பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியில் ‘ராமேஸ்வரம் கபே’ என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி அடுத்தடுத்து 2 முறை குண்டு வெடித்தது. இதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தடயவியல் சோதனையில் அங்கு வெடித்தது சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் பை ஒன்றை வைத்து விட்டு செல்வதும் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் என்ஐஏ, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், ஓட்டல் அருகே நின்றிருந்த கார் பதிவெண் உள்ளிட்டவைகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து நேற்று காலை 5க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் காரில் கோவை வந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனை டாக்டர்களான சாயிபாபா காலனியை சேர்ந்த ஜாபர் இக்பால் (39), நாராயண குரு ரோட்டில் வசிக்கும் நயீம் சித்திக் (37) ஆகியோர் வீடுகளில் காலை 6 மணி முதல் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த பீரோ, எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், லேப்டாப்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பின், 2 பேரின் செல்போன்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். மேலும், 2 பேரும் நாளை பெங்களூருவில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சென்றனர்.

பின்னர் என்ஐஏ அதிகாரிகள், 2 டாக்டர்களும் பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று நிர்வாகத்தினர் மற்றும் உடன் பணியாற்றும் டாக்டர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். ஜாபர் இக்பால், நயீம் சித்திக் இருவரும் சில ஆண்டிற்கு முன் பெங்களூருவில் வசித்துள்ளனர். மருத்துவ படிப்பு முடித்த பின் அல்கொய்தா அமைப்பினருடன் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 2 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கர்நாடகாவில் சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து வெளியே வந்ததும் கோவைக்கு வந்து வசிப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பில் இவர்களுக்கு பங்களிப்பு இருக்கலாம். தடை செய்யப்பட்ட அமைப்பினருக்கு இவர்கள் உதவி செய்திருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த ஓட்டல் பகுதியில் இருந்து 2 டாக்டர்களுக்கும் செல்போன் அழைப்பு சென்ற தகவல் அடிப்படையில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

The post பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : NIA ,Coimbatore ,Bengaluru ,Karnataka ,Rameswaram Cafe ,Whitefield ,Bangalore ,Dinakaran ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு...