கொரோனா தொற்றுக்கு பின் புற்றுநோய் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: பாபா ராம்தேவ் சொல்கிறார்

பனாஜி: கொரோனா தொற்றுக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்து உள்ளார். கோவாவின் மிராமார் கடற்கரையில் பதஞ்சலி யோகா சமிதி சார்பாக 3 நாள் யோகா முகாம் நேற்று தொடங்கியது. இதில் பதஞ்சலி நிறுவனர் பாபா  ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கொரோனா தொற்றுக்கு பின் மிகவும் உயர்ந்துள்ளது. மக்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகளாவிய ஆரோக்கிய மையமாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவாகும். அதேபோல் கோவா ஆரோக்கிய மையமாக இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும். ” என்றார்.

* எந்த தகவலும் இல்லை: நிபுணர்கள் கருத்து

பிரபல புற்றுநோயியல் நிபுணரும், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவா பிரிவின் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் சல்கர் கூறுகையில், மக்கள் தொகை அதிகரிப்பால் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் புற்றுநோய் பாதிப்பு 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. புற்றுநோய்  குறையப்போவதில்லை. ஆனால் அதிகரிப்புக்கு கொரோனா தொற்றை நீங்கள் காரணம் கூற முடியாது. பிரபலங்கள் பொறுப்புடன் அறிக்கைகளை வெளியிட வேண்டும்’ என்றார்.

அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஷ்ரதரன் கூறுகையில்,’ புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரிப்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு புற்றுநோய் அதிகரித்துள்ளது என்று கூறுவதற்கு தகவல் எதுவும் இல்லை’ என்றார்.

Related Stories: