கெபேஹா: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வதுமகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கெபேஹா நகரில் இன்று 2 லீக் போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரூப் 2 பிரிவில் இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா முதல் 2 போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. இதேபோல் இங்கிலாந்து முதல் 2 ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அயர்லாந்தை தோற்கடித்தது.
சம பலத்துடன் உள்ள இரு அணிகளும் இன்று `ஹாட்ரிக்’ வெற்றிக்காக களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெல்லும் அணி அரையிறுதியை உறுதி செய்யும். இரு அணிகளும் இதுவரை டி.20 போட்டிகளில் 26 முறை மோதி உள்ளன. இதில் 19ல் இங்கிலாந்து, 7ல் இந்தியா வென்றுள்ளன. உலக கோப்பையில் மோதிய 5 போட்டிகளிலும் இங்கிலாந்து தான் வென்றுள்ளது. இரவு 10.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
வெ.இண்டீஸ் முதல் வெற்றி
கேப்டவுனில் நேற்றிரவு நடந்த 13வது லீக் போட்டியில் குரூப் 2 பிரிவில் வெஸ்ட்இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ், 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஹேலி மேத்யூஸ் நாட்அவுட்டாக 66 ரன்(53பந்து) எடுத்து ஆட்டநாயகி விருது பெற்றார். முதல் 2 போட்டியிலும் தோற்று வெ.இண்டீசுக்கு இது முதல் வெற்றியாகும். அயர்லாந்து ஹாட்ரிக் தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
