×

பிஎஸ்சி, எம்எஸ்சி, யோகா படிப்புக்கு பாரதியார் பல்கலைக்கழகம் ஒப்புதல்

சென்னை:  கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழில் கூட்டுறவு மற்றும் உடற்கல்வி மையங்களில் பிஎஸ்சி, எம்எஸ்சி யோகா படிப்புகளை நடத்துவதற்கு பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2020ம் ஆண்டில் தொழிற்சாலைகளுடன் இணைந்து பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் தொழில் கூட்டுறவு மையங்களை உருவாக்கியுள்ளது. அதன்மூலம் மாணவர்கள் இடையே திறன்களை வளர்த்தல், வேலை வாய்ப்பு தொடர்பான படிப்புகளை நடத்துதல், கூட்டாக ஆய்வு மேற்கொள்ளுதல், பயிற்சி மற்றும் பணியிடைப்பயிற்சி ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கண்ட மையங்கள் மூலம் குறுகியகால தொழிற்சாலையில் பயிற்சி, சான்றிதழ், பட்டயப்படிப்புகள், முதுநிலை பட்டயப்பயிற்சிகள்  நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட மையங்களின் மூலம் பிஎஸ்சி, எம்எஸ்சி யோகா படிப்புகளை பாரதியார் பல்கலைக் கழகம் மூலம் நடத்தவும் அனுமதி கேட்டு ஆழியார், பொள்ளாச்சியில் உள்ள WCSC மையம் கேட்டிருந்தது. இந்த படிப்புகள் ஏற்கெனவே 2022ம் ஆண்டுமுதல் பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாரதியார் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் குழு மேற்கண்ட படிப்புகளை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இந்த படிப்புகள் நேரடியான படிப்புகளாக நடத்த வேண்டும் என்றும், மற்ற இளநிலை, முதுநிலை படிப்புகளைப் போல நடத்தப்பட வேண்டும் என்றும், பாரதியார் பல்கலைக் கழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதியதன் மூலம் உயர்கல்வித்துறையும்  தற்போது அதற்கு அனுமதி அளித்துள்ளது.


Tags : Bharatiyar University , B.Sc., M.Sc., Yoga Studies, Bharathiar University, Consent
× RELATED கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!!