×

மதத்தின் பெயரால் பிரிக்க முயற்சி வெளிநாட்டில் இருந்து வந்து காதலியை கரம்பிடித்த வாலிபர்: குமரியில் பரபரப்பு

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மனைவி சைலா. இந்த தம்பதியின் மகன் அனுராஜ் (23). வெளிநாட்டில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கல்குளம் காட்டாத்துறை பருத்திக்கோட்டைவிளை பகுதியை சேர்ந்தவர். கிறிஸ்டோபர் அவரது மகள் திவ்யா (20). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். திவ்யாவுக்கும், அனு ராஜிக்கும்  பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மலர்ந்தது. இந்த நிலையில் அனுராஜிடம் தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பெண் கேட்குமாறு திவ்யா கூறியுள்ளார்.

இதையடுத்து வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்த அனுராஜ், தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். மேலும் திவ்யாவின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்ற அனுராஜ், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இந்து மதத்தை சேர்ந்த அனுராஜுக்கு, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தங்கள் பெண் திவ்யாவை திருமணம் செய்ய கிறிஸ்டோபர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதேபோல் திவ்யா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மாறினால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக அனுராஜின் பெற்றோரும் பிடிவாதம் பிடித்தனர். இதனால் காதல்ஜோடி கலக்கமடைந்தது.

மதத்தின் பெயரால் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று நினைத்த திவ்யாவும், அனுராஜும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து திவ்யா நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலுக்கு வந்துவிட்டார். அங்கு ஏற்கனவே நண்பர்களுடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளுடன் தயாராக இருந்த அனுராஜ் சற்றும் தாமதிக்காமல் திவ்யாவின் கழுத்தில் தாலிகட்டி மனைவியாக்கினார். இந்துமுறைப்படி திருமணம் செய்துகொண்டதால் அனுராஜின் பெற்றோர் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்று காதல் ஜோடி காத்திருக்கின்றனர்.

Tags : Attempt to separate in the name of religion: Teenager who came from abroad and grabbed his girlfriend: sensation in Kumari
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...