புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங்குக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் வகையில் கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு திருத்தக் குழு கூட்டம் மூத்த தலைவர் அம்பிகா சோனி தலைமையில் டெல்லியில் நடந்தது. மூத்த தலைவர்களான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட மற்றும் அதிகாரமிக்க குழுவான காரிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்களாக சோனியா, ராகுல் ஆகியோரை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் கட்சியின் முன்னாள் பிரதமர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் காரிய கமிட்டியின் நிரந்த உறுப்பினர்களாக இடம்பெறுவர். வரும் 24 முதல் 26ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் தேசிய தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸ் காரிய கமிட்டியின் 24 உறுப்பினர்களும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 1,400 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட 3 பேரையும் நிரந்தர உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து அகில இந்திய உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். அதேநேரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, கட்சியின் தேர்தலை வழிநடத்துவார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
