×

ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் ஏன்?: பிரதமர் மோடி மவுனம் கலைத்து பதில் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்

டெல்லி: ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. முறைகேடு புகாருக்கு ஆளாகியுள்ள அதானி குழுமம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கும், ஒன்றிய அரசுக்கும் கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமருக்கு காங்கிரஸ் 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு கவுதம் அதானி மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்திலிருந்தே அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவை தொடர்பாக இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டு திட்டங்களை பெற்று இருக்கிறாரே என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

அதானி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு செல் நிறுவனங்கள் தொடர்பாக நம்ப தகுந்த குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ள நிலையில் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? என்று வினா எழுப்பியுள்ள காங்கிரஸ் உங்களுக்கும், ஆளும் பாஜக-க்கும் இதில் ஏதேனும் கைமாறு உண்டா என பிரதமரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

நமது ஆயுதப்படைகளின் அவசர கால தேவைகளை சாதகமாக பயன்படுத்தி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவங்களின் இழப்பில் எதற்காக அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை ஒன்றிய அரசு எளிதாக்குகிறது? என்ற கேள்வியையும் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. அதானி குழுமம் மீதான மோசடி புகார்கள் குறித்து தொடர்ந்து மவுனம் சாதித்து வரும் பிரதமர் மோடி இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தி இருக்கிறார்.  


Tags : Adani Group ,Modi ,Congress ,Jayaram Ramesh , Army, Department, Adani, Dominance, Prime Minister, Silence, Answer, Congress, Emphasis
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்